புதுடெல்லி,
நாட்டின் தலைநகர் டெல்லியில் தீபாவளி பண்டிகைக்கு பின்னர் ஒரு வாரமாக காற்றில் மாசு அதிகரித்து இருந்தது. பகல் பொழுது வந்த பின்னரும் காற்றில் மாசு காணப்படுவதால் டெல்லி நகர மக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகினர்.
குறிப்பாக குழந்தைகளும், முதியோரும் மூச்சு விட சிரமப்பட்டு வந்தனர். கண் எரிச்சலுக்கும் ஆளாகினர். இதனால் பகல் நேரத்தில் டெல்லியில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. மக்கள் சுவாச கவசம் அணிந்து நடமாடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாளுக்கு நாள் காற்றில் மாசு அதிகரித்து வரும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
இதனை கட்டுப்படுத்தும் வகையில் டெல்லியில் கடந்த நவம்பர் முதல் வாரத்தில், அடுத்து 7 நாட்களுக்கு கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்தது. கல் உடைக்கும் தொழிற்சாலைகளுக்கு ஒரு வாரம் தடை விதிக்கப்படுகிறது என்றும் உத்தரவிட்டது.
இந்த நிலையில், டெல்லியில் காற்று மாசை கட்டுக்குள் கொண்டு வர எடுத்த நடவடிக்கைகளை பற்றிய செயற்திட்டத்தினை தாக்கல் செய்யாத மாநில அரசை தேசிய பசுமை தீர்ப்பாயம் கடுமையாக சாடியுள்ளது.
டிசம்பர் 6ந்தேதிக்குள் செயற்திட்டத்தினை சமர்ப்பிக்கும்படி மாநில அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் காற்றின் தரம் தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ள நிலையில், பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே போட்டி நடத்தியதற்காக அதிகாரிகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 140 வருடங்களில் இல்லாத வகையில் சர்வதேச அணி ஒன்று மாசை கட்டுப்படுத்தும் முக கவசங்களை அணிந்து விளையாடியது இதுவே முதன்முறை ஆகும்.