கிரிக்கெட்

ரோகித், பும்ரா இல்லை... கோலியை விட அவர்தான் ஆஸ்திரேலிய மக்களால் அதிகம் விரும்பப்படுகிறார் - ஹெய்டன்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடியதாக ஹெய்டன் பாராட்டியுள்ளார்.

தினத்தந்தி

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.

இதனிடையே இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமானவர். ஏனெனில் பொதுவாகவே ஆஸ்திரேலியர்கள் ஆக்ரோஷத்துடன் போராடி வெற்றிகளை பெறும் குணத்தைக் கொண்டவர்கள். அதேபோலவே விராட் கோலி ஆக்ரோஷம் நிறைந்தவர். அத்துடன் அழுத்தமான சூழ்நிலைகளில் நங்கூரமாக பேட்டிங் செய்யக்கூடிய அவர் போராடி வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும் திறமையைக் கொண்டுள்ளார். அதனாலேயே அவரை பெரும்பாலான ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

இந்நிலையில் இப்போதெல்லாம் விராட் கோலியை விட ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய மக்களிடம் பிரபலமாக உள்ளதாக முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் தெரிவித்துள்ளார். குறிப்பாக 2020/21 பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் சிட்னி, காபா மைதானங்களில் நடைபெற்ற போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடியதாக ஹெய்டன் பாராட்டியுள்ளார். அதனாலேயே அவரை ஆஸ்திரேலிய மக்கள் விரும்புவதாக ஹெய்டன் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ரிஷப் பண்ட் போன்ற பையன்கள் வெற்றி தாகத்தை பெற்றுள்ளனர். கடைசியாக அவர் இங்கே விளையாடியபோது ஒரு முக்கிய வீரராக இருந்தார். மேலும் அவர் விளையாடிய விதத்தின் தன்மை காரணமாக ஆஸ்திரேலிய மக்களும் அவரை நேசித்தார்கள். அவருடைய ஆட்டம் உற்சாகமாகவும் புதுமையாகவும் நன்றாகவும் இருந்தது. அவரைத் தொடர்ந்து விராட் கோலியை போன்ற பழைய நட்சத்திரங்கள் மீண்டும் இங்கே தாக்கத்தை ஏற்படுத்த விரும்புவார்கள். எனவே இம்முறை பேட்டிங் பார்வையில் ஆஸ்திரேலிய சூழ்நிலைகளை இந்தியா எவ்வாறு கையாள்கிறது என்பதைப் பார்ப்பது ஆர்வமாக இருக்கும்" என்று கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு