கிரிக்கெட்

மும்பை டெஸ்ட்: இந்திய அணி அபார பந்து வீச்சு- நியூசிலாந்து 62 ரன்களில் ஆல் அவுட்

நியூசிலாந்துக்கு பாலோ-ஆன் கொடுக்காமல் இந்திய அணி 2-வது இன்னிங்சை துவங்கியுள்ளது.

மும்பை,

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் பேட்டிங்கை துவங்கிய இந்திய அணியில் விராட் கோலி, புஜாரா ஆகியோர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தாலும், துவக்க வீரர் மயங்க் அகர்வால் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 150 ரன்கள் குவித்த மயங்க் அகர்வால், அஜாஸ் படேல் பந்தில் ஆட்டமிழந்தார்.

நியூசிலாந்து அணியின் அஜாஸ் படேலின் மாயாஜால சுழலில் சிக்கிய இந்திய அணி 109.5 ஓவர்களில் 325- ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அஜாஸ் படேல் இந்திய அணியின் அனைத்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனையை நிகழ்த்தினார்.

இதையடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை துவங்கியது. இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் நியூசிலாந்து அணி தத்தளித்தது. 28.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்படித்த நியூசிலாந்து அணி 62 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பந்து வீச்சில் இந்திய அணியில் அதிகபட்சமாக அஷ்வின் 4 விக்கெட்டுகளையும் சிராஜ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

நியூசிலாந்துக்கு பால் ஆன் கொடுக்காமல் இந்திய அணி 2-வது இன்னிங்சை துவங்கியுள்ளது. 263 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை துவங்கி பேட் செய்து வருகிறது. மும்பை டெஸ்டை பொறுத்தவரை இந்திய அணியின் கை ஓங்கியுள்ளது.