கராச்சி,
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அபித் அலி நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பாகிஸ்தானை சேர்ந்த வலது கை பேட்ஸ்மேன் ஆன அபித் அலி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
இந்த நிலையில், 34 வயதான அபித் அலி நேற்று நடைபெற்ற போட்டியின் போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவர் 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பாதியிலேயே களத்திலிருந்து வெளியேறினார்.
பின் அவர் மருத்துவமனைக்கு சென்று முறையான பரிசோதனைகள் மேற்கொண்டார். பரிசோதனை முடிந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், அவருக்கு இதய நாளத்தில் அடைப்பு ஏற்பட்டதால் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், அதற்கான சிகிச்சையாக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருதய நாளத்தில் ஒரு ஸ்டெண்ட் வைக்கப்பட்டுள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அபித் அலி தற்போது பூரண நலமுடன் ஓய்வு எடுத்து வரும் வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் அவருடைய நண்பர் ஒருவர். விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.