கிரிக்கெட்

பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப்போட்டி - ரசிகர்களுக்கு அனுமதி

இந்த சீசனில் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறும் முதல் போட்டி இதுவாகும்.

லாகூர்,

பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2026 தொடரின் இறுதிப்போட்டி, ரசிகர்களின் முன்னிலையில் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெறும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொசின் நக்வி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் அனைத்தும் ரசிகர்களின்றி காலி மைதானங்களில் நடத்தப்பட்டன. இந்நிலையில், இறுதிப்போட்டியை மட்டும் ரசிகர்கள் முன்னிலையில் நடத்த தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரும், அந்நாட்டின் உள்துறை மந்திரியுமான மொசின் நக்வி இது குறித்து கூறுகையில், எரிபொருள் சிக்கனம் மிக முக்கியம் என்றாலும், அணி உரிமையாளர்களின் கோரிக்கை மற்றும் ரசிகர்களின் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இறுதிப்போட்டி மே 3 அன்று லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியைக் காண டிக்கெட்டுகள் விற்பனை குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறும் முதல் போட்டி இதுவாகும்.