ஜோகன்னஸ்பர்க்,
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், ஆல்-ரவுண்டருமான வெரோன் பிலாண்டர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் (டிச.26 முதல் ஜனவரி 28-ந்தேதி வரை) நடக்கிறது. இதுவே தான் விளையாடும் கடைசி சர்வதேச போட்டி என்று அவர் கூறியுள்ளார்.
2007-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த 34 வயதான பிலாண்டர் இதுவரை 60 டெஸ்டுகளில் விளையாடி 216 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். 30 ஒரு நாள் போட்டிகளிலும், 20 ஓவர் கிரிக்கெட்டில் 7 ஆட்டங்களிலும் பங்கேற்று இருக்கிறார். தனது முதல் 7 டெஸ்டுகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். ஆனால் அடிக்கடி காயத்தில் சிக்கிய அவர் பல போட்டிகளை தவறவிட்டார்.
தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சில் மும்மூர்த்திகள் என்று வர்ணிக்கப்பட்ட ஸ்டெயின், மோர்னே மோர்கல் ஏற்கனவே டெஸ்டில் இருந்து விடைபெற்று விட்டனர். அந்த கூட்டணியின் மற்றொரு அடையாளமாக காணப்பட்ட பிலாண்டரும் இப்போது கிரிக்கெட்டுக்கு முழுக்கு போடுகிறார்.