துபாய்,
7-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் அரங்கேறி வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட தரவரிசையில் டாப்-8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் களம் இறங்குகின்றன. சூப்பர்-12 சுற்றில் விளையாட இருக்கும் அணிகள் தங்களை தயார்படுத்தி கொள்வதற்கு பயிற்சி ஆட்டங்களில் ஆடுகின்றன.
அந்த வகையில் துபாயில் இன்று விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, தனது 2-வது மற்றும் கடைசி பயிற்சி ஆட்டத்தில் , ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இதற்கு முன்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச், பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் கேப்டனாக இன்று ரோகித் சர்மா செயல்பட்டார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர்(1) மற்றும் ஆரோன் பிஞ்ச்(8) தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்து வெளியேறினர். அடுத்து வந்த மிட்செல் மார்ஷ்(0) கேட்ச் ஆகி வெளியேறினார்.
இவ்வாறு ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், ஸ்டீவன் ஸ்மித-மேக்ஸ்வெல் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அரைசதத்தைக் கடந்த ஸ்டீவன் ஸ்மித், 57 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். க்ளென் மேக்ஸ்வெல் 37 ரன்களில் போல்ட் ஆனார். மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் 25 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இறுதியாக ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அஸ்வின் 2 விக்கெடுகளும், புவனேஸ்வர் குமார், ராகுல் சாஹர் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 153 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். இதில் கே.எல்.ராகுல் 39 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அரைசதத்தை கடந்து விளையாடிய ரோகித் சர்மா 60 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறினார். இறுதியாக இந்திய அணி 17.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ்(38) மற்றும் ஹர்திக் பாண்டியா(14) இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.