சென்னை,
19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் மோதின.
சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது.
சென்னை தரப்பில் அதிகபட்சமாக ஆயுஷ் மாத்ரே 73 ரன்களையும், ஷிவம் துபே 45 ரன்களையும், சர்ப்ராஸ் கான் 32 ரன்களையும் குவித்தனர். பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக விஜய்குமார் வைஷாக் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் பிரியான்ஷ் ஆர்யா 11 பந்துகளில் 39 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 34 பந்துகளில் 43 ரன்களும் குவித்தனர். அடுத்து வந்த குப்பர் கான்லி 36 ரன்கள் சேர்த்தார். அதிரடியாக ஆடிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 29 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார்.
இறுதியில் பஞ்சாப் 18.4 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றிபெற்றது. சென்னை தரப்பில் மேட் ஹென்றி, அன்ஷுல் கம்போஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடிய 2 ஆட்டங்களிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் (10) உள்ளது.