லண்டன்,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ரசிகர்கள் இன்றி சவுதம்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது. இதன்பின் 2வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டு ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த போட்டியில், இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் இங்கிலாந்து 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் வருகிற 24ந்தேதி தொடங்குகிறது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி நடைபெறுவதற்கு முன், மருத்துவ பாதுகாப்பு விதிகளை மீறிய குற்றத்திற்காக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் போட்டியில் இருந்து நீக்கியது.
இதனை தொடர்ந்து, ஆர்ச்சர் 5 நாட்கள் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டார். அவருக்கு 2 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், அவருக்கு கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என முடிவு வந்தது. இதனை தொடர்ந்து 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாட அவர் சேர்க்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில், பாதுகாப்பு விதிமீறலால் தன் மீது சமூக ஊடகங்களில் இனவெறி துஷ்பிரயோகம் செய்யும் வகையில் விமர்சனங்கள் வந்தன என ஆர்ச்சர் கூறியுள்ளார். அவர் கூறும்பொழுது, நான் குற்றம் ஒன்றும் செய்யவில்லை. கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் எனக்கெதிரான இனவெறி விமர்சனங்களை சந்தித்தேன். நான் 100 சதவீதம் மனதளவில் சரியாக இருக்க வேண்டும்.
அதன்பின்பே என்னால் சரியாக விளையாட முடியும். நான் போட்டியில், மணிக்கு 90 மைல் வேகத்தில் பந்து வீசவில்லை என்றால் அது செய்தியாக போகிறது. நான் மணிக்கு 90 மைல் வேகத்தில் தொடர்ந்து பந்து வீசவில்லை என்றாலும் அது செய்தியாகும்.
ஒவ்வொரு முறை விளையாடும்பொழுதும், 100 சதவீத முழுதிறமையை வெளிப்படுத்தும் வகையில் விளையாடுவேன். ஆனால், அதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாத நிலையில், நான் விளையாட விரும்பவில்லை. நடந்தவை நடந்தவைகளாகவே இருக்கட்டும்.
இதுபற்றி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திடம் நான் புகார் அளித்து உள்ளேன் என கூறியுள்ளார். இதனால் இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடுவது பற்றி உறுதிப்படுத்த முடியவில்லை என ஆர்ச்சர் கூறியுள்ளார்.