கவுகாத்தி,
19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் மோதின.
கவுகாத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
சஞ்சு சாம்சன் 6 ரன்னிலும், கேப்டன் கெய்குவாட் 6 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த மாத்ரே ரன் எதுவும் எடுக்காமலும் (0), ஷாட் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ராஜஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சால் சென்னை 19.4 ஓவரில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ஓவர்டன் 43 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக பந்து வீசிய ராஜஸ்தான் அணியின் ஆர்ச்சர், பெர்கர், ஜடேஜா அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறக்கிய ராஜஸ்தான் தொடக்க வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சூர்யவன்ஷி 17 பந்துகளில் 52 ரன்கள் குவித்து அவுட் ஆனார். அடுத்து வந்த துருவ் ஜுரெல் 18 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் ராஜஸ்தான் 12.1 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றிபெற்றது. ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால் 38 ரன்னிலும், ரியான் பராக் 14 ரன்னிலும் களத்தில் இருந்தனர். சென்னை தரப்பில் கம்போஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வியடைந்துள்ளது.