புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் வீரர்களை 4 பிரிவாக ஒப்பந்தம் செய்து ஊதியம் வழங்குகிறது. இதன்படி ஏ பிளஸ் பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது. ஏ பிரிவுக்கு ரூ.5 கோடி, பி பிரிவுக்கு ரூ.3 கோடி, சி பிரிவுக்கு ரூ.1 கோடி வீதம் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான ஒப்பந்த பட்டியலை இறுதி செய்து வரும் இந்திய கிரிக்கெட் வாரியம் விரைவில் வெளியிட உள்ளது. சமீபத்திய டெஸ்ட் போட்டிகளில் ரன் எடுக்க முடியாமல் திணறும் மூத்த வீரர்கள் புஜாரா, ரஹானே ஆகியோர் ஏ பிரிவில் உள்ளனர். அவர்கள் இந்த முறை தரம் இறக்கப்பட்டு பி பிரிவுக்கு தள்ளப்படுவார்கள் என்று தெரிகிறது.
அதே சமயம் வருங்கால கேப்டன்களாக அடையாளம் காணப்பட்டுள்ள லோகேஷ் ராகுல், ரிஷாப் பண்ட் ஆகியோர் ஏ பிளசுக்கு தரம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இந்த பிரிவில் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆல்-ரவுண்டர்கள் ஷர்துல் தாக்குர், அக்ஷர் பட்டேல் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆகியோருக்கும் ஜாக்பாட் அடிக்க உள்ளது.