சென்னை,
கடந்த 2024 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, ரோகித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கி, ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக நிர்வாகம் நியமித்தது. அந்த முடிவு அப்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், நடப்பு 2026 ஐபிஎல் தொடரில் மும்பை அணி எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. விளையாடிய 14 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் ஹர்திக் பாண்டியாவை கேப்டன் பதவியிலிருந்து மாற்ற நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த கேப்டனை தேர்வு செய்வதில் ரோகித் சர்மாவின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம், ரோகித் சர்மா மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்க வாய்ப்பு இல்லை என்றும், அடுத்த கேப்டனை தேர்வு செய்யும் வழிகாட்டியாக மட்டுமே அவர் செயல்படுவார் என்றும் தெரிகிறது.
மும்பை அணியின் புதிய கேப்டன் யார் என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபகாலமாக ஹர்திக் பாண்டியா மும்பையில் இருந்து விலகி சென்னை அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.