கிரிக்கெட்

அதிரும் கிரிக்கெட் உலகம்... 37 ஆண்டுகால சாதனையை தவிடுபொடியாக்கும் ரோகித் சர்மா

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று தரம்சாலாவில் நடைபெறுகிறது.

தரம்சாலா,

முல்லன்பூரில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று (ஜூன் 13) தரம்சாலாவில் நடைபெறுகிறது. தொடரின் 2-வது மற்றும் 3-வது போட்டிகள் முறையே ஜூன் 17-ம் தேதி லக்னோவிலும், ஜூன் 20-ம் தேதி சென்னையிலும் நடைபெற உள்ளன.

உடற்தகுதி தேர்வில் வெற்றி

முன்னாள் இந்திய கேப்டன் ரோகித் சர்மா உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்று, முதல் ஒருநாள் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க தயாராக உள்ளார்.

புதிய இந்திய சாதனை

இன்றைய போட்டியில் விளையாடுவதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடிய அதிக வயதான இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற உள்ளார். இதன்மூலம், முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் மொஹிந்தர் அமர்நாத் பெயரில் இருந்த 37 ஆண்டுகால சாதனையையும் அவர் முறியடிக்க உள்ளார்.

1989-ம் ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக தனது கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடியபோது மொஹிந்தர் அமர்நாத்தின் வயது 39 ஆண்டுகள் 36 நாட்களாக இருந்தது.

39 வயது 44 நாட்களில் புதிய மைல்கல்

இன்று களம் காணும் ரோகித் சர்மாவின் வயது 39 ஆண்டுகள் 44 நாட்கள் ஆகும். இதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாடிய அதிக வயதான வீரர் என்ற புதிய வரலாற்றை அவர் படைக்க போகிறார்.

உலக சாதனை இன்னும் நீடிப்பு

எனினும், உலக அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடிய அதிக வயதான வீரர் என்ற சாதனை இன்னும் நோலன் கிளார்க் வசமே உள்ளது. நெதர்லாந்தை சேர்ந்த நோலன் கிளார்க், 1996-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாடியபோது அவருக்கு வயது 47 ஆண்டுகள் 257 நாட்கள்.

ரோகித்தின் மற்றொரு பெருமை

ஒருநாள் போட்டிகளில் 11 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களையும், சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களையும் குவித்துள்ள ரோகித் சர்மா, தனது கிரிக்கெட் பயணத்தில் மேலும் ஒரு வரலாற்று சாதனையை பதிவு செய்ய உள்ளார்.