லண்டன்,
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே, இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட், இந்தியாவின் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு இணையானவர் என்று பாராட்டியுள்ளார்.
இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியாவும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
2-வது ஒருநாள் போட்டியில் ஜோ ரூட் அபாரமாக விளையாடி ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் குவித்து இங்கிலாந்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். ரூட்டின் இந்த ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே பாராட்டி உள்ளார்.
இதுகுறித்து பேசிய அனில் கும்ப்ளே, "இந்தியாவுக்கு விராட் கோலியும் ரோகித் சர்மாவும் எப்படியோ, அதேபோல்தான் இங்கிலாந்துக்கு ஜோ ரூட். தற்போதைய இங்கிலாந்து அணியில் ஒருநாள் போட்டிக்கு ஏற்ற வகையில் விளையாடும் பேட்ஸ்மேன் ஜோ ரூட் மட்டுமே. மற்ற பேட்ஸ்மேன்கள் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடுகின்றனர். ஆனால், ரூட் பொறுமையாக இன்னிங்ஸை கட்டமைத்து, நேரம் எடுத்துக்கொண்டு ரன் சேஸிங்கை சிறப்பாக செய்தார்" என்று தெரிவித்தார்.
இந்தியா-இங்கிலாந்து மோதும் 3-வது ஒருநாள் ஆட்டம் வருகிற 19-ம் தேதி நடக்க உள்ளது. இதுவே ரோகித் சர்மாவின் கடைசி சர்வதேச ஆட்டம் என்று கூறப்படுகிறது. அந்த ஆட்டத்துடன் அவர் தனது ஓய்வை அறிவிக்க உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.