ஐபிஎல் கிரிக்கெட்டின் 15ஆவது சீசனின் இன்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன. இதுவரை 4 நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.
குறிப்பாக கடந்த சீசனில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற பெருமையை பெற்ற சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் இந்த சீசனில் இதுவரை சோபிக்கவில்லை. 4 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 18 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.
இந்த நிலையில் ருதுராஜின் மோசமான பார்ம் குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார். ருதுராஜ் குறித்து அவர் கூறுகையில்," ருதுராஜ் தனது எதிர்கால கிரிக்கெட் குறித்தும், இந்திய அணியில் இடம் பிடிப்பது குறித்தும் தற்போதே யோசிக்க துவங்கிவிட்டார் எனக் கருதுகிறேன்.
இதனால்தான், அவருக்கு அழுத்தம் ஏற்படுகிறது. ருதுராஜ் இனி இதுகுறித்து யோசிக்க கூடாது. சிஎஸ்கேவுக்காக விளையாடுவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இந்திய அணிக்காக விளையாடுவதை இத்தொடர் முடிந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் எனக் கூறினார்.