தம்புள்ளை,
இலங்கையின் ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணியின் கேப்டன் திலக் வர்மா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.
இந்திய அணிக்காக தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் வைபவ் சூர்யவன்சி களமிறங்கினர்.
இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்த நிலையில், அவர் 12 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து பிரப்சிம்ரன் சிங்கும் 11 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
ஆரம்ப அதிர்ச்சிக்குப் பிறகு பிரியான்ஷ் ஆர்யா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், 32 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்த பிரியான்ஷ் ஆர்யா துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார்.
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட்டுடன் இணைந்து அணியின் இன்னிங்ஸை முன்னெடுத்துச் சென்றார். ஒரு முனையில் நிதானமாக விளையாடிய கெய்க்வாட் அரைசதம் கடந்தார். மறுமுனையில் திலக் வர்மாவும் சிறப்பாக விளையாடி தனது அரைசதத்தை பதிவு செய்தார். இருவரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா ஏ அணி வலுவான ஸ்கோரை நோக்கி நகர்ந்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் சதம் விளாசி அசத்தினார். பின்னர் அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், 101(114) ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து திலக் வர்மாவும் 60(97) தனது விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் கெய்க்வாட்டின் சதம் மற்றும் திலக் வர்மாவின் அரைசதத்தின் உதவியுடன் இந்தியா ஏ அணி 50 ஓவர்களில் 277 ஸ்கோரை பதிவு செய்தது. இதையடுத்து 278 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இலங்கை ஆட உள்ளது.