மொகாலி,
இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 129.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்த டெஸ்டில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் இந்திய அணியின் முதுகொலும்பாக திகழ்ந்தார் ஜடேஜா.
இந்திய அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 (228 பந்துகள் 17 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) ரன்கள் குவித்தார். பேட்டிங்கில் ஜொலித்த ஜடேஜா பந்துவீச்சிலும் தனது மாயாஜாலத்தை காட்டினார். அவர் இலங்கை அணி விளையாடிய முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அத்துடன், ஒரே டெஸ்டில் 150-க்கும் அதிகமான ரன்களை குவித்ததுடன், ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஆறாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றார்.
முதல் இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் எடுத்ததுடன், 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜடேஜா வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார். அவருக்கு சச்சின் டெண்டுல்கர், வாசிம் ஜாபர், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
"ஜடேஜா தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மூலம் அனைத்தையும் பொன்னாக மாற்றுகிறார்" என்று சச்சின் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், வாசிம் ஜாபர், "ஜடேஜாவால் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கின் மூலம் ஆட்டத்தை மாற்றவும் அணியை வெற்றிபெறவைக்கவும் முடியும்" என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தனது டுவிட்டர் பதிவில் ஜடேஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.