சென்னை,
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய சாம் கரண் இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாடி வருவது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்ககாரவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற டிரேடிங் முறையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறினார். அதற்கு பதிலாக, சென்னை அணியில் இருந்து ஆல்ரவுண்டர்களான சாம் கரண் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்தனர்.
ஆனால், ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே காயம் காரணமாக சாம் கரண் தொடரிலிருந்து விலகினார். அவரால் முழு சீசனிலும் விளையாட முடியாது என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவருக்கு மாற்றாக இலங்கை வீரர் தசுன் ஷானகாவை அணியில் சேர்த்தது.
இந்நிலையில், காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய சாம் கரண், பின்னர் இங்கிலாந்தில் சர்ரே அணிக்காக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்ககாராவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய குமார் சங்ககாரா, “சாம் கரணுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்த சீசன் முழுவதும் விளையாட முடியாது என்று எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு அவர் சர்ரே அணிக்காக இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளார் என்று நினைக்கிறேன். இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. அவர் எங்களுக்காக விளையாடியிருந்தால் அணிக்கு பெரிய உதவியாக இருந்திருக்கும். அவர் விலகுவதாக முன்பே கூறப்பட்டதால், நாங்கள் அவருக்கு பதிலாக தசுன் ஷானகாவை அணியில் சேர்த்தோம்” என்றார்.
இதற்கிடையில், நியூ சண்டீகரில் கடந்த 29-ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் 2026 குவாலிபையர்-2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை ராஜஸ்தான் அணி இழந்தது குறிப்பிடத்தக்கது.