சென்னை,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் தற்போது உலக கிரிக்கெட்டில் பேசுபொருளாகி உள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் அவர் 42 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார். அவரது இந்த இன்னிங்ஸ் இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.
அதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான சூப்பர்-8 போட்டியில் அவர் ஆடிய அதிரடி இன்னிங்ஸ் இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றது. அதுமட்டுமில்லாமல், அவரது தந்தையின் கண்களிலும் மகிழ்ச்சி கண்ணீரை வரவைத்தது.
அந்த போட்டியில் சஞ்சு சாம்சன் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது சிறப்பான இன்னிங்ஸ் இந்தியாவை அரையிறுதிக்கு கொண்டு சென்றது. இந்த வெற்றிக்குப் பிறகு, சஞ்சுவின் தந்தை சாம்சன் விஸ்வநாத் அளித்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில் உணர்ச்சிவசப்பட்டு அவர் கூறியதாவது:
“வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டி தொடங்கிய முதல் பந்திலிருந்து கடைசி பந்துவரை நான் டிவி முன்பேதான் இருந்தேன். என் வாழ்க்கையில் முதல் முறையாக கடவுளிடம் ஒன்று கேட்டேன். என் மகனுக்கு ஒரு வாய்ப்பு கொடு் என்று பிரார்த்தித்தேன். இன்று அவர் விளையாடிய விதத்தை பார்த்தபோது நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவன்போல உணர்கிறேன்,” என்று கண்கலங்கினார். இந்த வீடியோ தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.