

மும்பை,
2026 டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் தனது அசத்தலான பீல்டிங்கால் போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் அவர் பிடித்த கேட்ச் ரசிகர்களுக்கு 1983 உலகக் கோப்பை இறுதிப்போட்டியை நினைவூட்டியது.
இந்த தொடர் முழுவதும் இந்திய அணியின் பீல்டிங் குறித்து விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில், அரையிறுதி போட்டியில் அக்சர் படேல் தனது அற்புதமான பீல்டிங்கால் அந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் விக்கெட்டை இந்தியா முதலில் கைப்பற்றியது. ஹர்திக் பாண்ட்யா வீசிய ஓவரின் முதல் பந்திலேயே பெரிய ஷாட்டை அடிக்க முயன்றார். அதை அக்சர் படேல் அழகாக பிடித்து இந்தியாவுக்கு முக்கியமான விக்கெட்டை பெற்றுத் தந்தார்.
இதையடுத்து ஜஸ்ப்ரீத் பும்ரா வீசிய மெதுவான பந்தை இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் சரியாக டைம் செய்ய முடியாமல் உயரமாக அடித்தார். அப்போது 30-யார்டு சர்கிளில் நின்றிருந்த அக்சர் படேல் சுமார் 24 மீட்டர் தூரம் ஓடி சென்று கடைசி தருணத்தில் டைவ் செய்து அசத்தலான கேட்ச் பிடித்தார். இது 1983 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் கபில் தேவ் பிடித்த புகழ்பெற்ற கேட்சை நினைவுபடுத்தியதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல், வில் ஜேக்ஸ் அடித்த பந்தை அக்சர் படேல் எல்லையில் பாய்ந்து பிடித்ததும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், அக்சர் படேல் பிடித்த இந்த அற்புத கேட்ச் இந்த தொடரின் சிறந்த கேட்சாக இருக்கலாம் என்றும் பலரும் பாராட்டி வருகின்றனர்.