கிரிக்கெட்

சஞ்சு சாம்சன் அதிரடியால் அரையிறுதியில் இந்தியா: வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபாரம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது.

கொல்கத்தா,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வந்தன.

இதில் இன்று நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஷாய் ஹோப்பும், சேஸும் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்து அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். பின்னர் சேஸ் 40 ரன்களும், ஹோப் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் அதிரடி காட்ட தொடங்கினர். ஹெட்மயர் 27 ரன்களும், ருதர்போர்டு 14 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இறுதியில் ஹோல்டர், ரோவ்மேன் பவல் அதிரடி காட்ட, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில் அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் அபிஷேக் சர்மா 10 ரன்களில் வெளியேற, அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் 10 ரன்களும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 18 ரன்களும், அதிரடி காட்டிய திலக் வர்மா 27 (15) ரன்களும் எடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் தனது அரைசதத்தை பதிவு செய்தார். அடுத்ததாக சஞ்சு சாம்சனுடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். ஓரளவு ரன்கள் சேர்த்த பாண்ட்யா 17 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

முடிவில் சிவம் துபே 8 ரன்களும், அதிரடியில் மிரட்டிய சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 97 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் மற்றும் சமர் ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றதன்மூலம், அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. இதன்படி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா அணிகள் மோத உள்ளன.