தரம்சாலா,
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் இமாசலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் நேற்று நடைபெற்றது. மழை குறுக்கீடு காரணமாக போட்டி 25 ஓவர்களாக குறைக்கப்பட்டது. Iஇதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி வெறும் 48 பந்துகளில் சதம் விளாசினார். இருப்பினும், 194 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதையடுத்து 195 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி ஏற்பட்டது. ரோகித் சர்மா 16 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின் சுப்மன் கில் சிறப்பாக விளையாடி 37 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன் பலனாக இந்திய அணி 22.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஒரு சிக்சர் விளாசி 11 ரன்களை கடந்தபோது, சர்வதேச கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களையும் சேர்த்து 16,000 ரன்களை கடந்த 2-வது இந்திய தொடக்க ஆட்டக்காரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார்.
மேலும், இந்த சாதனையை எட்டிய உலகின் 7-வது தொடக்க வீரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி லக்னோவில் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது.