கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக் கோப்பை - 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீராங்கனை... சாதனை படைத்த ஷப்னிம்

2026 மகளிர் டி20 உலகக் கோப்பையில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஓவல்,

தென் ஆப்பிரிக்கா மகளிர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயில் வரலாற்றுப் புத்தகங்களில் தனது பெயரைப் பதித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து

2026 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி ஓவல் மைதானத்தில் நடந்தது. இதில் தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் இங்கிலாந்து 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

முதல் பந்துவீச்சாளர்

இருப்பினும் இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய தென் ஆப்பிரிக்காவின் ஷப்னிம் இஸ்மாயில் தனது முதல் இரண்டு ஓவர்களிலேயே தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

இதன் மூலம், மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். மேலும், மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

இந்த 2026 மகளிர் டி20 உலகக் கோப்பையில், ஷப்னிம் தென் ஆப்பிரிக்காவுக்காக அனைத்து போட்டிகளிலும் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.