கிரிக்கெட்

நடுவர் மீது கோபம்: ஸ்டம்ப்பை காலால் உதைத்த வீரருக்கு 4 போட்டிகளில் விளையாட தடை

போட்டி நடுவரின் முடிவால் இரு முறை ஸ்டம்ப் மீது கோபம் காட்டிய ஷாகிப் அல் ஹசனுக்கு 4 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

டாக்கா,

வங்காளதேசத்தில் டாக்கா பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், எம்.எஸ்.சி. எனப்படும் முகமதன் ஸ்போர்ட்டிங் கிளப் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ஷாகிப் அல் ஹசன், அபஹனி லிமிடெட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீசினார்.

பேட்ஸ்மேன் முஷ்ஃபிகுர் ரஹிமை எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழக்க கள நடுவரிடம் அப்பீல் செய்தார். ஆனால் அவுட் கொடுக்க நடுவர் மறுத்துவிட்டார். இதனால் கோபம் கொண்ட ஷாகிப், உடனடியாக நடுவர் அருகே இருந்த ஸ்டம்புகளை காலால் எட்டி உதைத்து நடுவரிடம் இதுகுறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மற்றொரு முறை, மழை வந்ததால் போட்டியை நிறுத்தும்படி நடுவர்கள் உத்தரவிட்டார்கள். இதனால் ஓய்வறைக்கு பேட்ஸ்மேன்கள் திரும்பினர். அப்போது ஷாகிப்பின் அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது. அப்போதும் நடுவரின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறுமுனையில் இருந்த மூன்று ஸ்டம்புகளையும் பிடுங்கி வீசினார் ஷாகிப் அல் ஹசன். பிறகு மீண்டும் நடுவரிடம் வாக்குவாதம் செய்தார்.

இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. பலரும் அவரது செயலுக்கு கண்டனம் தெரிவித்தார்கள். இதனை தொடர்ந்து ஷாகிப் மன்னிப்பு தெரிவித்து பேஸ்புக்கில் பதிவு வெளியிட்டார்.

என்னுடைய கோபத்துக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். மூத்த வீரரான நான் அதுபோல நடந்து கொண்டிருக்கக் கூடாது. என் தவறுக்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்று மீண்டும் நடந்து கொள்ளமாட்டேன் என கூறினார்.

நடுவரிடம் ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பின்னர் வங்காளதேச கிரிக்கெட் வாரிய இயக்குனர் காலித் மகமூதுவிடமும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதனை அடுத்து அந்த அணியின் கிரிக்கெட் குழு தலைவர் மசூதுஜ்மன், அல் ஹசனுக்கு 4 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்ட உத்தரவை உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு ஐ.சி.சி.யின் ஊழல் ஒழிப்பு விதிகளை மீறியதற்காக 12 போட்டிகளில் விளையாட அல் ஹசனுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது