மும்பை,
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரராக விளையாடி வருபவர் ஷிகர் தவான். நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை 3 அரை சதங்கள் அடித்துள்ள தவான் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார்.
பேட்டிங்கை தாண்டி களத்தில் தவானின் செயல்பாட்டிற்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பெரிய வரவேற்பு உண்டு. குறிப்பாக ஒவ்வொரு கேட்ச் பிடித்த பிறகும் தவான் கொண்டாடும் விதத்திற்கு மைதானத்தில் ரசிகர்கள் ஆரவாரம் செய்வர்.
அதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் இவர் ஆக்ட்டிவாக இருப்பவர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் அவர் விரைவில் சினிமாவில் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பாலிவுட் படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து விட்டதாகவும் அந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ஐபிஎல் போட்டிகளில் தவான் கவனம் செலுத்தி வருகிறார். இந்த தொடர் முடிந்த பிறகு இது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.