கிரிக்கெட்

இந்திய இளம் வீரர் பிரசித் கிருஷ்ணாவை புகழ்ந்த சோயப் அக்தர்

இந்திய இளம் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஒரு அதிசய வீரர் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கூறியுள்ளார்.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

இங்கிலாந்து கிர்க்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அடுத்து ஆமதாபாத்தில் நடந்த 5 டி20 ஆட்டங்களை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.

இதனை தொடர்ந்து புனேவில் நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், டி20 தொடரிலும் இளம் வீரர்கள் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், க்ருனால் பாண்டியா என அனைவரும் தங்கள் பங்கிற்கு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இவர்களின் ஆட்டத்தை பல முன்னனி கிரிக்கெட் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். இந்தியாவிடம் இளம் வீரர்களை தயாரிக்கும் மிஷின் இருக்கிறது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கூறீயிருந்தார். இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், இந்திய வீரர்களின் ஆட்டத்தை பாராட்டியுள்ளார்.

அதிலும் குறிப்பாக புனேவில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சு மிக அபாரமாக இருந்தது என்று அக்தர் கூறியுள்ளார். மேலும் அவர் கிருஷ்ணா அல்ல, கரிஷ்மா (அதிசயம்) என்று சோயப் அக்தர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய பிரசித் 8.1 ஓவர்கள் வீசி 54 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அவரது பந்து வீச்சில் ஒரு கேட்ச் நழுவ விடப்பட்டது. இல்லாவிட்டால் அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.