அகமதாபாத்,
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில், நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஒரு புதிய மைல்கல்லை எட்டினார். டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிவேகமாக 6,000 ரன்களைக் கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இப்போட்டிக்கு முன்பாக இந்த மைல்கல்லை எட்ட கில்லுக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், குஜராத் இன்னிங்ஸின் 7-வது ஓவரின் முதல் பந்தில் அவர் தனது 36-வது ரன்னை எடுத்து 6000 ரன்கள் கிளப்பில் இணைந்தார்.
18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்த போது, 7-வது ஓவரின் முதல் பந்தில் நூர் அகமதுவின் பந்துவீச்சை எதிர்கொண்ட கில், ஒரு பிரம்மாண்ட சிக்ஸர் அடித்து 6000 ரன்களை கடந்தார். இந்த சிக்ஸர் மூலம், டி20 கிரிக்கெட்டில் தனது 200-வது சிக்ஸரையும் அவர் பூர்த்தி செய்தார்.
இந்த சாதனையின் மூலம், டி20 கிரிக்கெட்டில் மிக வேகமாக 6,000 ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை கில் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் கே.எல் ராகுல்166 இன்னிங்ஸ்களிலும், விராட் கோலி 184 இன்னிங்ஸ்களிலும் இந்த மைல்கல்லை எட்டிய நிலையில், கில் 185 இன்னிங்ஸ்களில் 6,000 ரன்களை கடந்துள்ளார்.