கிரிக்கெட்

சிக்சர் மழை.! இந்தியா அதிரடி பேட்டிங்... ஜிம்பாப்வேக்கு 257 ரன்கள் இலக்கு

இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் குவித்துள்ளது.

சென்னை,

டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான ஆட்டத்தில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அக்சர் படேலும் அணியில் இடம் பிடித்துள்ளார். தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சனும், அபிஷேக் சர்மாவும் களமிறங்கினர். சாம்சன் அதிரடியுடன் விளையாடி 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன், அபிஷேக் சர்மாவுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அபிஷேக் சர்மா அரைசதமடித்து மீண்டும் பார்முக்கு திரும்பினார். அவர் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 38 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 33 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் திலக் வர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் குவித்துள்ளது. ஹர்திக் 23 பந்துகளில் 50 ரன்களும், திலக் 16 பந்துகளில் 44 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர். இதையடுத்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்து வருகிறது.