மும்பை,
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார். பெயர் வெளியிட விரும்பாத அந்த பெண்ணின் சார்பில் அவரது குற்றச்சாட்டை பாடகி சின்மயி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:- எனது பெயரை சொல்ல விரும்பவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு நான் மும்பையில் இருந்த போது நடந்த சம்பவம் இது. அப்போது அங்குள்ள ஓட்டலில் தங்கியிருந்த எனது தோழியை சந்திக்க சென்றேன்.
அங்கு ஐ.பி.எல். கிரிக்கெட்டின் மூலம் பிரபலமான இலங்கை வீரர் நிற்பதை பார்த்ததும் பரவசப்பட்டேன். என்னிடம் பேச்சுகொடுத்த அவர், எனது தோழி அவரது அறையில் இருப்பதாக கூறினார். அதை நம்பி நானும் அங்கு சென்றேன். அறையில் எனது தோழி இல்லை. அப்போது இலங்கை வீரர் என்னை படுக்கையில் தள்ளி தவறாக நடக்க முயற்சித்தார். அந்த சமயம் ஓட்டல் ஊழியர் கதவை தட்டினார். கதவை திறந்ததும் நான் அங்கிருந்து ஓடிவிட்டேன்.
இதை வைத்து, அவர் பிரபலம் என்பதால் நானாக அவரது அறைக்கு சென்றிருக்கலாம் என்று சிலர் கூறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.