கிரிக்கெட்

மலைப்பூட்டும் ‘மலைப்பகுதி’ பெண்!

இந்த மகளிர் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ் தானுக்கு எதிரான போட்டியில் அவர்களை மண்டியிட வைத்தவர், ஏக்தா பிஷ்ட். தனது சுழல் ஜாலத்தில், 18 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் பேட்டிங்கின் முதுகெலும்பை முறித்தார், ஏக்தா.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழ மொழிக்குச் சரியான உதாரணம் இவர். உத்தரகாண்ட் மலைப்பிரதேசத்தில் பிறந்த ஏக்தா, உருவத்தில் சிறியவர். ஆனால் பந்துவீச்சில் விஸ்வரூபம் எடுப்பவர்.
அதற்குச் சரியான உதாரணம், இந்தியா- பாகிஸ்தான் போட்டி. இப்போட்டியில் 170 ரன்கள் என்ற எளிய இலக்கையே நிர்ணயித்திருந்தபோதிலும் இந்தியாவால் 95 ரன்கள் வித்தியாசத்தில் பெருவெற்றி பெற முடிந்தது என்றால், அதற்கு முக்கியக் காரணம் ஏக்தா. இவரது சுழலை எப்படி எதிர்கொள்வது என்றே பாகிஸ்தான் வீராங்கனைகளுக்குத் தெரியவில்லை.

உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து 11 ஆண்டுகளுக்குப் பின் முதல் வீராங்கனையாக தேசிய அணிக்கு ஏக்தா தேர்வானபோது அதை அவரது பகுதி மக்கள் இனிப்பு கொடுத்தும், மேளம் அடித்தும் கொண்டாடினர்.
அந்தப் பெருமையையும் மகிழ்ச்சியையும் ஏக்தா இன்று வரை நீடிக்கச் செய்திருக்கிறார். அதன் விளைவாகவே இவர் இந்திய அணியில் தொடர்ந்து நீடிக்கிறார்.

ஏக்தாவின் கிரிக்கெட் பயணம் 9 வயதில் தொடங்கியது. மலைப்பகுதி என்பதால் மைதான வசதி இல்லை. கூட கிரிக்கெட் விளையாட பெண்களும் இல்லை.

தனது காலனி பையன்களுடன் விளையாடியே தன் கிரிக்கெட் தாகத்தை ஏக்தா தணித்து வந்தார். இவருக்குள் மறைந்திருந்த கிரிக்கெட் திறமையை முதலில் அறிந்தவர், உள்ளூர் பயிற்சியாளரான லியாகத் அலி. ஏக்தாவை தனது சிறகுக்குள் பாதுகாத்து நல்லதொரு கிரிக்கெட் வீராங்கனையாக வளர்த்தெடுத்தார், லியாகத்.

மிதவேகப் பந்துவீச்சில் ஆர்வம் காட்டிய ஏக்தாவை சுழற்பந்து வீச்சு பக்கம் திருப்பியவர், லியாகத் அலிதான்.

ஏக்தாவின் தந்தை குந்தன் பிஷ்ட், 1971 இந்திய- பாகிஸ்தான் போரில் பங்கேற்றவர்.

அன்று தந்தைக்கும், இன்று மகளுக்கும் வெற்றி!

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...