சிட்னி,
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.
நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 55 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது. லபுஸ்சேன் 67 ரன்களுடனும் (149 பந்து, 8 பவுண்டரி), ஸ்மித் 31 ரன்களுடனும் (64 பந்து, 5 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், 2 ஆம் நாள் ஆட்டம் இன்று துவங்கியதும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பும்ரா, ஜடேஜாவின் துல்லிய பந்துவீச்சால் நிலை தடுமாறினர். லபுஸ்சேன் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபுறம் ஸ்மித் நங்கூரம் போல நிலைத்து நின்று ரன்வேட்டையில் ஈடுபட்டார். அபாரமாக ஆடிய ஸ்மித் சதம் விளாசினார்.
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஸ்மித் அடிக்கும் 27-வது சதம் இதுவாகும். 100 ஓவர்கள் நிலவரப்படி ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 103 ரன்களுடனும் ஸ்டார்க் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.