புது டெல்லி,
இந்தியா-ஆப்கானிஸ்தான் போட்டி குறித்து முன்னாள் ஆப்கான் வீரர் காலிக் தாத் நூரி, ஆப்கான் கிரிக்கெட் வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்திய அணி மீது தான் அழுத்தம் உள்ளது. எங்கள் அணி மீது அல்ல.இந்திய அணியை காட்டிலும் எங்கள் அணியின் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. இதை அனைவரும் ஒத்துக்கொள்வர். எங்கள் சுழற்பந்துவீச்சு உலக தரத்தில் உள்ளது
என்று டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
கடும் அழுத்தத்தில் உள்ள இந்திய வீரர்களை ஆப்கானிஸ்தான் அணியால் வீழ்த்த முடியும் என்றும் கூறியுள்ளார்.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால், அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவது எளிதாகும்.
மறுமுனையில் இந்திய அணிக்கு நடப்பு டி20 உலகக்கோப்பை தொடர் கடும் சவாலாக இருந்து வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளது.
இனிவரும் எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் எனும் கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. கூடவே, மற்ற அணிகள் விளையாடும் போட்டிகளின் முடிவை பொறுத்தே இந்திய அணியின் அரை இறுதி வாய்ப்பு அமையும்.