கிரிக்கெட்

டி20 போட்டி: மகளிர் அணி கேப்டனாக அதிக ரன்கள் குவித்து ஹர்மன்பிரீத் கவுர் சாதனை

ஒரு கேப்டனாக 138 போட்டிகளில் விளையாடிய அவர் 3,017 ரன்களை எடுத்துள்ளார்.

ஜோகன்னஸ்பர்க்

டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மகளிர் அணி கேப்டனாக அதிக ரன்கள் குவித்து ஹர்மன்பிரீத் கவுர் சாதனை படைத்துள்ளார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்த 3-வது டி20 போட்டியில் 38 பந்துகளில் 66 ரன்களை எடுத்தபோது இந்த மைல்கல்லை அவர் அடைந்துள்ளார். அவற்றில் 7 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் அடங்கும்.

ஒரு கேப்டனாக 138 போட்டிகளில் விளையாடிய அவர் 3,017 ரன்களை எடுத்துள்ளார். இவற்றில் ஒரு சதம், 14 அரை சதங்கள் அடங்கும். இலங்கை அணியின் சமரி அத்தபத்து 108 போட்டிகளில் விளையாடி 3,016 ரன்கள் எடுத்துள்ளார். அவற்றில், 3 சதங்கள், 14 அரை சதங்கள் அடங்கும். அவருடைய சாதனையை கவுர் முறியடித்து முன்னிலை பெற்றுள்ளார்.

இதேபோன்று மகளிர் டி20 போட்டிகளில் 3,947 ரன்களுடன் அதிக ரன்களை எடுத்த 3-வது வீராங்கனையாக அவர் உள்ளார்.