மும்பை,
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து 10-வது ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடரை நடத்துகிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் தலா 5 அணிகள் என 4 பிரிவுகளாக (ஏ,பி,சி,டி) பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில் இன்று நடைபெற்ற 5வது ஆட்டத்தில் இங்கிலாந்து - நேபாளம் அணிகள் மோதின.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்கம் முதல் அதிரடி காட்டிய இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தேல் , ஹாரி புரூக் இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதமடித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 184 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து 185 ரன்கள் இலக்குடன் நேபாளம் அணி விளையாடியது.நேபாளம் அணிக்கு ஆசிப் ஷேக் (7), குஷல் 29 ரன்கள் , கேப்டன் ரோகித் பௌடெல் 39 ரன்கள் , தீபிந்திர சிங் 44 ரன்களை அடித்தனர். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும் நேபாளம் அணி தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டது.
நேபாளம் சார்பில் லோகேஷ் பாம் கடைசி ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் நேபாளம் அணி 6 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழல் உருவானது. கடைசி ஓவர்களில் லோகேஷ் மற்றும் கரண் பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தனர். கடைசி பந்தில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் லேகேஷ் பாம் 1 ரன் எடுக்க நேபாளம் அணி போராடி தோல்வியை தழுவியது. இதனால் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.