கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை: யுஏஇ அணியை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி

நியூசிலாந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - யுஏஇ(ஐக்கிய அரபு அமீரகம்) அணிகள் மோதின.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற யுஏஇ அணியின் கேப்டன் முகமது வசீம் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி யுஏஇ அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் ஆர்யன்ஸ் ஷர்மா 8 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து முகமது வசீம் , அலிஷான் சராபு ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். அதிரடியாகி விளையாடிய இருவரும் அரைசதமடித்து அசத்தினர். முகமது வசீம் 66 ரன்களும் , அலிஷான் சராபு 55 ரன்களும் எடுத்தனர். இறுதியில் யுஏஇ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 174 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடியது.

தொடக்க வீரர்களாக டிம் சீபராட் , பின் ஆலன் களமிறங்கினர். தொடக்கம் முதல் யுஏஇ அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். பந்துகளை , பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்ட இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

இறுதியில் 15.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 175 ரன்கள் எடுத்து நியூசிலாந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.டிம் சீபராட் 42 பந்துகளில் 89 ரன்களும் , பின் ஆலன் 50 பந்துகளில் 84 ரன்களும் எடுத்தனர்.