கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை: ஓமன் அணியை வீழ்த்தி இலங்கை வெற்றி

இலங்கை அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொழும்பு,

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு தகுதி பெறும்.

தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பி பிரிவில் அங்கம் வகிக்கும் இலங்கை - ஓமன் அணிகள் மோதின. பல்லெகல்லேவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரரகள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. குசல் மெண்டிசும், ரத்நாயகேவும் அதிரடி காட்டினர். இவர்களின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருவரும் அரைசதம் கடந்தனர். குசல் மெண்டிஸ் 61 ரன்னிலும், ரநாயகே 60 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

கடைசி கட்டத்தில் கேப்டன் ஷனகா அதிரடியில் மிரட்டினார். அவர் 19 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் அரைசதத்தை எட்டினார். இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது. ஓமன் தரப்பில் வசிம் அலி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஓமன் அணி பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஓமன் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் முகமது நதீம் அபாரமாக விளையாடி அரைசதமடித்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு ஓமன் அணி 120 ரன்கள் எடுத்தது. இதனால் இலங்கை அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.