மும்பை,
இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் 10-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற 7-ந்தேதி முதல் அடுத்த மாதம் 8-ந்தேதி வரை நடைபெற உள்ளன. இதனையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
இதில், இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையே இன்று நடந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் தேர்வு செய்ததும், இந்திய அணி முதலில் விளையாடியது.
தொடக்கம் முதல் இந்திய அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர். தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த இந்திய அணி வீரர்கள் வான வேடிக்கை காட்டினர்.
இதில், இஷான் கிஷான் அரை சதம் விளாசினார். அபிஷேக் சர்மா 24 ரன்கள், திலக் வர்மா 45 ரன்கள், அக்சர் படேல் 35 ரன்கள் எடுத்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 240 ரன்கள் குவித்தது.
இதனை தொடர்ந்து 241 என்ற வெற்றி இலக்குடன் தென்ஆப்பிரிக்க அணி ஆடியது. இதில், தொடக்க ஆட்டக்காரர்களான மார்க்ரம் (38), லிண்டே (0) ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிக அளவாக ஸ்டப்ஸ் 45, விக்கெட் கீப்பரான ரிக்கெல்டன் 44, ஜேசன் ஸ்மித் 35, மார்கோ ஜேன்சன் 31 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 210 ரன்களே எடுத்தது. இதனால், இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.