நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறது.
இந்த போட்டி தொடரில் இந்திய அணி 1-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில் ராஜ்கோட்டில் நேற்று நடந்த 2வது டி20 போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.
இந்தியாவிற்கு 197 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தவான் மற்றும் ரோகித் சர்மா முதல் 2 ஓவர்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா 11 ரன்கள் எடுத்திருந்தது.
நியூசிலாந்து இடதுகை வேகப்பந்து வீச்சாளரான டிரென்ட் போல்ட் 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து கைப்பற்றினார். நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேனான மன்ரோ 7 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது அணியின் வெற்றிக்கு உதவியது.
இந்த நிலையில் இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய மன்ரோ, தொடக்க ஆட்டக்காரர்களை தொடக்கத்திலேயே வீழ்த்தியது வெற்றியாக அமைந்தது. 2 விக்கெட்டுகளை கைப்பற்றியது இந்திய அணியின் வேகத்திற்கு தடையாக அமைந்தது. அவர்கள் 2 பேரும் முதல் டி20 போட்டியில் விளையாடியது போன்று நல்ல நிலையிலேயே இருந்தனர்.
எங்களது பந்து வீச்சாளர்களான சான்ட்னர் மற்றும் சோதி தொடக்கத்தில் பந்துவீச்சு விகிதத்தில் பின்தங்கி இருந்த நிலையில் தொடர்ந்து தங்களது திறமையை போட்டியில் நிரூபித்தனர். நேற்று பந்து வீசிய டிரென்ட் அசாத்தியமுடன் செயல்பட்டார் என கூறியுள்ளார்.