கிரிக்கெட்

பஸ் டிரைவரிலிருந்து உலகக் கோப்பை வெற்றிவரை… இந்திய அணியின் ‘அன்சீன் ஹீரோ’

டி20 உலகக் கோப்பை வெற்றியில் வீரர்களுடன் சேர்ந்து அணியின் ஆதரவு பணியாளர்களும் முக்கிய பங்கு வகித்தனர்.

சென்னை,

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மீண்டும் வரலாறு படைத்தது. இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியில் வீரர்களுடன் சேர்ந்து அணியின் ஆதரவு பணியாளர்களும் முக்கிய பங்கு வகித்தனர்.

அவர்களில் குறிப்பிடத்தக்கவர் இலங்கையைச் சேர்ந்த நுவான் செனவிரத்னே. ‘பவ்வா’ என்ற பெயரில் இந்திய அணியில் அழைக்கப்படும் அவர் தற்போது இடதுகை “த்ரோ-டவுன்’’ பயிற்சி நிபுணராக பணியாற்றி வருகிறார்.

1979 நவம்பர் 14-ம் தேதி இலங்கையின் கொலும்புவில் பிறந்த நுவான் செனவிரத்னே, ஒருகாலத்தில் முதல் தர கிரிக்கெட்டில் விளையாடியவர். ஆனால் 2004-ம் ஆண்டு இரண்டு போட்டிகளுக்குப் பிறகு அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவடைந்தது. குடும்பத்திற்காக கொழும்பில் பள்ளி பேருந்து டிரைவராக பணியாற்றினார்.

பின்னர் 2016ஆம் ஆண்டு இலங்கை அணியில் ஆதரவு பணியாளராக அவர் பணியாற்றிய போது, அவரது திறமை இலங்கை முன்னாள் பேட்டர் சரித் சேனநாயக்கே கவனத்தை ஈர்த்தது.

அதனைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அவரை பயிற்சியில் பந்து வீச அழைத்தனர். இடதுகை த்ரோ-டவுன்களால் அதிக வேகத்திலும் வித்தியாசமான கோணங்களிலும் பந்து வீசும் அவரது திறமை, விராட் போன்ற இந்திய நட்சத்திர பேட்டர்களை சிரமப்படுத்தியது.

அதன் பின்னர், பிசிசிஐ அவரை இந்திய அணிக்காக நியமித்தது. 2018 ஆசியக் கோப்பை தொடர் முதல் இந்திய அணியின் ஆதரவு குழுவில் முக்கிய உறுப்பினராக அவர் உள்ளார். இந்திய அணியின் வெற்றிக்குப் பின்னால் பலர் பேசப்படாத நாயகர்களாக உள்ளனர். பள்ளி பேருந்து டிரைவராக இருந்த நுவான் செனவிரத்னே இன்று இந்திய அணியின் வெற்றிக்கு துணைபுரிந்துள்ளார்.