பிரிஸ்பேன்,
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. பாகிஸ்தான் அணியில் 16 வயது வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா அறிமுக வீரராக இடம் பிடித்தார். வேகப்பந்து வீச்சுக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அவரும், ஷான் மசூத்தும் ஆஸ்திரேலியாவின் தாக்குதலை சமாளித்து மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். ஆனால் இந்த வலுவான அஸ்திவாரத்தை பின்வரிசை வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள தவறினர்.
ஸ்கோர் 75 ரன்களை எட்டிய போது ஷான் மசூத் (27 ரன்) கம்மின்சின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற சுமித்திடம் கேட்ச் ஆனார். ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் இந்த மைதானத்தில் வெளிநாட்டு தொடக்க ஜோடியின் சிறந்த பார்ட்னர்ஷிப் (75 ரன்) இது தான். அதன் பிறகு அசார் அலி (39 ரன்), ஹாரிஸ் சோகைல் (1 ரன்), பாபர் அசாம் (1 ரன்) வரிசையாக நடையை கட்டினர். அதிரடி காட்டிய விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் தனது பங்குக்கு 37 ரன்கள் (34 பந்து, 7 பவுண்டரி) எடுத்தார்.
ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 143 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்தது. 7-வது விக்கெட்டுக்கு ஆசாத் ஷபிக்குடன் கைகோர்த்த யாசிர் ஷா அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடக்க ஒத்துழைத்தார். யாசிர் ஷா 26 ரன்னிலும், ஆசாத் ஷபிக் 76 ரன்களிலும் வீழ்ந்தனர்.
முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 86.2 ஓவர்களில் 240 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.
ஆஸ்திரேலிய அணி 2-வது நாளான இன்று தனது முதல் இன்னிங்சை விளையாட உள்ளது.