கிரிக்கெட்

"பெரிய டீம் ஆனா கோப்பை ஜெயிக்க மாட்டாங்கன்னு சொன்னாங்க..."- விராட் கோலி உருக்கம்

பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி தனது முதல் கோப்பையை முத்தமிட்டது குறித்து விராட் கோலி பேசியுள்ளார்.

புது டெல்லி,

ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட 2008-ம் ஆண்டிலிருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்காக மட்டுமே விளையாடி வரும் விராட் கோலி, கடந்த ஆண்டு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி தனது முதல் கோப்பையை முத்தமிட்டது குறித்துப் பேசியுள்ளார்.

ஆர்சிபி ரசிகர்களின் 18 ஆண்டுகால நீண்ட காத்திருப்புக்குக் கிடைத்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குப் பிறகு, மைதானத்திலேயே விராட் கோலி கண்ணீர் மல்க உணர்ச்சிவசப்பட்டதை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் பார்த்தது.

அந்த வரலாற்றுத் தருணம் குறித்துப் பேசிய விராட் கோலி, "கோப்பையை வெல்லும்போது இருந்த என்னுடைய உணர்வுகளை வார்த்தைகளால் விவரிப்பது மிகவும் கடினம். போட்டி முடிந்த அந்த நொடியில், என் கைகளைக் கூப்பி முழங்காலில் அமர்ந்து கடவுளுக்கு 'நன்றி' மட்டுமே சொன்னேன். நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்குள் இந்த ஒரு அற்புதமான தருணத்தை என் வாழ்வில் அனுபவித்துவிட வேண்டும் என்று வேண்டினேன். அது நடந்தது" என்றார்.

மேலும், "இறுதி ஓவரின் கடைசி 4 பந்துகளின் போது நான் என்ன உணர்ந்தேன் என்பதை மற்றவர்களுக்கு வார்த்தைகளால் புரிய வைக்க முடியாது. இத்தனை வருடங்களாக வெளியில் இருந்து பார்ப்பவர்கள் ஆர்சிபி அணியை எப்படிப் பார்த்தார்கள் என்பது எனக்குத் தெரியும். 'பெரிய அணி, பெரிய பிரான்சைஸ், ஆனால் கோப்பை மட்டும் ஜெயிக்கவே மாட்டார்கள்', 'நெருங்கி வந்து கோட்டையை விடும் அணி' என்றெல்லாம் விமர்சித்தார்கள்.

ஒவ்வொரு சீசனிலும் இந்த அழுத்தம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. வெளியில் இருந்து அதை வேடிக்கை பார்ப்பது வேறு, அதைத் தினசரி வாழ்க்கையாக வாழ்ந்து பார்ப்பது வேறு. நான் அந்த அழுத்தங்கள் அனைத்தையும் ஒவ்வொரு சீசனிலும் கடந்து வந்திருக்கிறேன்" என்றார்.

கடந்த சீசனைபோலவே இந்த சீசனும் ஆர்சிபி அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது லீக் ஆட்டங்கள் முடிய உள்ளநிலையில், ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.