அடிலெய்டு,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. இந்த டெஸ்டில் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் இது பகல்-இரவு மோதலாகும். இதற்காக பிரத்யேகமான இளஞ்சிவப்பு நிற பந்து (பிங்க்) பயன்படுத்தப்படும். ஆஷஸ் வரலாற்றில் மின்னொளியின் கீழ் நடத்தப்படும் முதல் டெஸ்ட் இது தான்.
தொடக்க டெஸ்டில் இங்கிலாந்து நிர்ணயித்த 171 ரன்கள் இலக்கை ஆஸ்திரேலிய அணி, டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்தது. முதல் இன்னிங்சில் கேப்டன் ஸ்டீவன் சுமித் குவித்த 141 ரன்கள் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது.
அடிலெய்டு ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும், நன்கு ஸ்விங் ஆகும் என்று ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீமான் கூறியுள்ளார். அதனால் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகியோரின் தாக்குதல் இன்னும் தீவிரமாக இருக்கும்.
ஆஸ்திரேலிய அணிக்கு இளஞ்சிவப்பு நிற பந்தில் விளையாடிய அனுபவம் அதிகம் உண்டு. அந்த அணி இதுவரை மூன்று பகல்-இரவு டெஸ்டில் (நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தானுக்கு எதிராக) விளையாடி அனைத்திலும் வெற்றி கண்டிருக்கிறது. இந்த சாதனைப் பயணத்தை தொடர்வதில் அந்த அணி வீரர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
முதலாவது டெஸ்டில் மோசமாக தோற்றதால் விமர்சனத்திற்குள்ளான இங்கிலாந்து அணியினர் சரிவில் இருந்து எழுச்சி பெறும் முனைப்புடன் இருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜாக் பால், கிறிஸ் வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார்கள் என்பதை பொறுத்தே இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பு அமையும். பதிலடி கொடுப்பார்களா? அல்லது பணிந்து போவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அடிலெய்டு மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி 2010-ம் ஆண்டுக்கு பிறகு தோற்றதில்லை. இங்கு அந்த அணி இதுவரை 75 டெஸ்டுகளில் விளையாடி அதில் 39-ல் வெற்றியும், 17-ல் தோல்வியும், 19-ல் டிராவும் கண்டுள்ளது. இங்கிலாந்து இங்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 31 டெஸ்டில் பங்கேற்று அதில் 9-ல் வெற்றியும், 17-ல் தோல்வியும், 5-ல் டிராவும் சந்தித்துள்ளது. இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.