கிரிக்கெட்

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ரஹானே, குல்தீப் யாதவ் ஆகியோரை கேப்டன் விராட்கோலி வெகுவாக பாராட்டினார்.

போர்ட் ஆப் ஸ்பெயின்,

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று முன்தினம் நடந்தது.

மழையால் இரண்டு மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டதால் 43 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்த ரஹானே, ஷிகர் தவான் ஆகியோர் அருமையாக விளையாடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்து வலுவான ஸ்கோரை எட்டுவதற்கு வித்திட்டனர்.

நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்களில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான் 63 ரன்னிலும், 3-வது சதத்தை விளாசிய ரஹானே 103 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 4 ரன்னிலும், யுவராஜ்சிங் 14 ரன்னிலும், கேப்டன் விராட்கோலி 87 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். டோனி (13 ரன்), கேதர் ஜாதவ் (13 ரன்) களத்தில் நின்றனர்.

இந்தியா வெற்றி

பின்னர் 311 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் கீரன் பவெல், ஜாசன் முகமது ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் புவனேஷ்வர்குமாரின் வேகத்தில் வீழ்ந்தனர். அதன் தொடர்ச்சியாக எவின் லீவிஸ் 21 ரன்னிலும், ஜோனதன் கார்டர் 13 ரன்னிலும், கேப்டன் ஜாசன் ஹோல்டர் 29 ரன்னிலும் வெளியேறினர்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான ஷாய் ஹோப் (88 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 81 ரன்கள்) மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினார். ஆனாலும் வெஸ்ட் இண்டீசால் இலக்கை நெருங்க முடியவில்லை. 43 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 205 ரன்னே எடுத்தது. இதனால் இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோஸ்டன் சேஸ் 33 ரன்னுடனும், ஆஷ்லே நர்ஸ் 19 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் சைனா மேன் வகை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், புவனேஷ்வர்குமார் 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். நீண்ட இடைவெளிக்கு பிறகு பந்து வீசிய யுவராஜ்சிங்குக்கு விக்கெட் கிடைக்கவில்லை. அவர் 5 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ரஹானே ஆட்டநாயகன் விருது பெற்றார் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி ஆன்டிகுவாவில் நடக்கிறது.

கோலி பேட்டி


வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-
மீண்டும் ஒரு முழு மனநிறைவை அளித்த ஆட்டமாக இது அமைந்தது. ரஹானே, ஷிகர் தவான் பார்ட்னர்ஷிப் ஆட்டம் அற்புதமானது. நானும் (விராட்கோலி) எனக்கு பின்னால் களம் கண்ட யுவராஜ், டோனி, கேதர் ஜாதவ் ஆகியோரும் பங்களிப்பு அளித்தோம். புவனேஷ்வர்குமார் தொடக்கத்திலேயே விக்கெட்டை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் ஒரு நாள் கிரிக்கெட்டில் முதல்முறையாக பந்து வீசியதோடு 3 விக்கெட்டுகளை சாய்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அணியில் வெளியில் இருக்கும் வீரர்களின் பலமும் நன்றாக இருக்கிறது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் எதிர்பாராதவிதமாக ரஹானேவுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. ஆனாலும் அவர் தனது மனவலிமையை வெளிப்படுத்தி, உள்ளே வந்ததும் ரன்கள் குவித்துள்ளார்.

சமீபகாலமாக நமது ஒருநாள் போட்டி அணி அமைப்பில் ரஹானே தவிர்க்க முடியாத வீரராக விளங்குகிறார். தொடக்க நிலையில் ஆடக்கூடிய சிறந்த திறமை கொண்ட பேட்ஸ்மேனாக விளங்குகிறார். அணியில் அவர் எப்போதும் 3-வது தொடக்க வீரர் வாய்ப்பில் இருக்கிறார். தற்போது ரஹானே தன் மீதான நெருக்கடியை நிறைய குறைத்து கொண்டு அனுபவித்து விளையாடுகிறார்.

தொடர்ந்து அவர் அப்படி ஆடினால் தான் ஒருநாள் போட்டியில் முன்னேற்றம் காண முடியும். மிடில் ஆர்டர் வரிசையிலும் ரஹானேவால் நன்றாக செயல்பட முடியும். இதனால் 2019-ம் ஆண்டில் நடைபெறும் உலக கோப்பை போன்ற பெரிய போட்டியில் குறிப்பாக கூடுதல் பந்து வீச்சாளரை சேர்க்க வாய்ப்பு கிடைக்கும். ஒரு சில வீரர்கள் தான் ரஹானே போல் அணியில் இரண்டு வரிசையில் இறங்க முடியும். இது அணியில் சிறந்த கலவையை உருவாக்க உதவிகரமாக இருக்கும்.

குல்தீப்புக்கு பாராட்டு

குல்தீப் யாதவின் கிராஸ் சீம் (பந்தின் நடுவில் இருக்கும் தையல் பகுதியில் நேராக கைவைக்காமல் குறுக்காக பிடித்து வீசுவது) பந்து வீச்சு இருபுறமும் நன்றாக சுழலுகிறது. இந்த மாதிரி பந்து வீசுவது எளிதான காரியம் அல்ல. அதே போல் இத்தகைய பந்து வீச்சை கணித்து விளையாடுவதும் சுலபமல்ல. இதுபோன்ற பந்து வீச்சை ஐ.பி.எல். போட்டியில் அவரிடம் இருந்து நான் எதிர்கொண்டு இருக்கிறேன். மேலும் வறண்ட ஆடுகளத்தில் குல்தீப் யாதவின் பந்து வீச்சை எதிர்கொள்வதும் கடினமாகும். அவர் தனது முதல் போட்டியிலேயே அபாரமாக பந்து வீசி திறமையை நிரூபித்துள்ளார். மணிக்கட்டை பயன்படுத்தி பந்து வீசக்கூடிய அவர் நமது அணிக்கு கிடைத்து இருப்பது போனசாகும். ஒட்டுமொத்த அணியாக நாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம். எல்லா துறைகளிலும் எங்களது பணியை சரியாக செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
இவ்வாறு கோலி கூறினார்.

சாதனை துளிகள்

* வெஸ்ட்இண்டீஸ் மண்ணில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஒருவர் (ரஹானே) சதம் அடித்து இருப்பது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2006-ம் ஆண்டில் கிங்ஸ்டனில் நடந்த ஆட்டத்தில் டிராவிட் தொடக்க வீரராக களம் கண்டு 105 ரன்கள் எடுத்து இருந்தார்.

* வெஸ்ட்இண்டீஸ் மண்ணில் அந்த அணிக்கு எதிராக இந்திய அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி (105 ரன் வித்தியாசம்) இது என்பது குறிப்பிடத்தக்கது.

* ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக முறை 300 ரன்களுக்கு மேல் குவித்த அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்திய அணி 96-வது முறையாக 300 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. இந்த வகையில் ஆஸ்திரேலியா 95 முறையும், தென்ஆப்பிரிக்கா 77 முறையும், பாகிஸ்தான் 69 முறையும் 300 ரன்களுக்கு மேல் எடுத்து இருக்கின்றன.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு