சென்னை,
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.
டோனி தலைமையிலான சென்னை அணி தனது முதல் 3 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக (பெங்களூரு, டெல்லி, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக) வெற்றியை தனதாக்கியது. முந்தைய லீக் ஆட்டத்தில் சென்னை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வியை தழுவியது. அந்த ஆட்டத்தில் சென்னை அணியின் பந்து வீச்சு, பீல்டிங் மோசமாக இருந்தது. குறிப்பாக கடைசி 4 ஓவர்களில் சென்னை பவுலர்கள் 67 ரன்களை வாரி வழங்கியது பாதகமான அம்சமாக மாறியது.
சென்னை அணியில் ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், டோனி ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். தொடக்க ஆட்டக்காரர் அம்பத்தி ராயுடு பார்ம் இன்றி தவிப்பது, சென்னை அணிக்கு தலைவலியாக இருக்கிறது. எனவே அவருக்கு பதிலாக உள்ளூர் ஆட்டக்காரர் முரளி விஜய்க்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று பேச்சு எழுந்துள்ளது. மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட வெய்ன் பிராவோ 2 வார காலம் விளையாடமாட்டார் என்று சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்ஹஸ்சி நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். ஆல்-ரவுண்டரான வெய்ன் பிராவோ இல்லாதது சென்னை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு என்பதில் சந்தேகம் இல்லை. அவருக்கு பதிலாக நியூசிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் குஜ்ஜெலின் களம் இறங்குவார் என்று தெரிகிறது.
இந்த சீசனில் சென்னை அணி உள்ளூரில் ஆடும் 3-வது போட்டி இதுவாகும். சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முந்தைய 2 லீக் ஆட்டங்களிலும் பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க திணறினர். இருப்பினும் சென்னை அணி சிறப்பாக செயல்பட்டு 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்திலும் சென்னை அணி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி (ராஜஸ்தான், மும்பை, டெல்லி அணிக்கு எதிராக), ஒரு தோல்வி (கொல்கத்தா அணியிடம்) கண்டுள்ளது. கடந்த லீக் ஆட்டத்தில் முதுகுவலி காரணமாக ஆடாத பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் உடல் தகுதியை பெற்று விட்டதால் இன்றைய ஆட்டத்தில் களம் திரும்புகிறார். இதே போல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த இளம் ஆல்-ரவுண்டர் சாம் குர்ரன் இன்றைய ஆட்டத்திலும் தொடருவார் என்று தெரிகிறது.