கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா

இந்த கோடை காலம், தேர்தல் மற்றும் ஐ.பி.எல். திருவிழாவினால் களைக்கட்டத் தொடங்கிவிட்டது. குறிப்பாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களை இன்று முதல் அடுத்த 50 நாட்களுக்கு ஐ.பி.எல். ஜூரம் ஆட்டுவிக்கப்போகிறது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

தினத்தந்தி

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. அது முதல் இந்த போட்டிக்கு ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஒரு சினிமா படம் பார்ப்பது போன்று 3 மணி நேரத்தில் அதுவும் சில சமயம் திரில்லிங்காகவும், சுவாரஸ்யமாகவும் அமைவதால் இந்த சரவெடி போட்டிக்கு உள்ள மவுசே தனி தான்.

இன்று தொடங்கும் 12-வது ஐ.பி.எல். தொடரில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வெற்றி வாய்ப்பில் முதன்மையான இடத்தில் உள்ளது. இதுவரை ஆடியுள்ள அனைத்து ஐ.பி.எல். தொடரிலும் லீக் சுற்றை தாண்டிய ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான். 2 ஆண்டு தடை காலத்திற்கு பிறகு கடந்த ஆண்டு மறுபிரவேசம் செய்த போது, சென்னை அணி எழுச்சி பெறுமா? என்ற சந்தேகம் பொதுவாக இருந்தது. ஆனால் டோனியின் கேப்டன்ஷிப்பில் சென்னை அணி தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. கடந்த சீசனில் சென்னை அணி 3-வது முறையாக கோப்பையை வசப்படுத்தியது என்றால், அதற்கு வீரர்களின் கூட்டு முயற்சியே காரணம் என்றால் மிகையாகாது. சென்னை அணியில் 8 வீரர்கள் ஆட்டநாயகன் விருது பெற்று வியக்க வைத்தனர். பெரும்பாலான வீரர்கள் அணியில் அப்படியே தொடர்வதால் சென்னை அணி இந்த முறையும் நம்பிக்கையுடன் காணப்படுகிறது.

2016-ம் ஆண்டு சாம்பியனும், கடந்த ஆண்டு 2-வது இடத்தை பிடித்த அணியுமான ஐதராபாத் சன்ரைசர்சும் மிரட்டுவதற்கு காத்திருக்கிறது. ஐதராபாத் அணியின் பிரதான பலம் பந்து வீச்சு தான். ஸ்விங் செய்வதில் வல்லவரான புவனேஷ்வர்குமார், சுழல் ஜாலம் காட்டக்கூடிய ரஷித்கான், கலீல் அகமது, முகமது நபி, ஷகிப் அல்-ஹசன், டி.நடராஜன் உள்ளிட்டோர் பந்து வீச்சில் வலு சேர்க்கிறார்கள். கேப்டன் வில்லியம்சன், விஜய் சங்கர், டேவிட் வார்னர், விருத்திமான் சஹா, கப்தில், யூசுப் பதான், பேர்ஸ்டோ, மனிஷ் பாண்டே என்று தரமான பேட்ஸ்மேன்களுக்கும் பஞ்சமில்லை. ஆனால் தோள்பட்டை காயத்தில் சிக்கிய கேப்டன் வில்லியம்சன் தொடக்க ஆட்டங்களில் ஆடுவதில் சிக்கல் நிலவுகிறது.

ஐ.பி.எல்.-ல் அதிக வெற்றிகளை (97 வெற்றி) குவித்த அணியான 3 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சும் வலுவான அணியாகவே படையெடுக்கிறது. கேப்டன் ரோகித் சர்மா, பாண்ட்யா சகோதரர்கள், பொல்லார்ட், ஜஸ்பிரித் பும்ரா, மலிங்கா, இவின் லீவிஸ், குயின்டான் டி காக், மயங்க் மார்கண்டே ஆகியோர் மும்பை அணியில் நட்சத்திர வீரர்களாக வலம் வருகிறார்கள். ஒரு காலத்தில் ரூ.16 கோடிக்கு ஏலம் போன யுவராஜ்சிங் இந்த சீசனில் மும்பை அணிக்காக ரூ.1 கோடிக்கு ஒதுக்கப்பட்டார். இது அவர் கால்பதிக்கும் 6-வது அணியாகும்.

ஒவ்வொரு முறையும் பலம் வாய்ந்த அணியாக இறங்குவதும், அதன் பிறகு தடுமாறுவதும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு வாடிக்கையாகும். ஐ.பி.எல். உதயமானதில் இருந்து மாற்றமின்றி ஒரே அணியில் நீடிக்கும் ஒரே வீரரான விராட் கோலி, மைதானத்தின் 360 டிகிரி கோணத்திலும் பந்தை விரட்டக்கூடிய டிவில்லியர்ஸ் ஆகிய இருவரும் பெங்களூரு அணியின் தூண்கள் ஆவர். 3 முறை இறுதிசுற்றுக்கு முன்னேறியும் அந்த அணிக்கு மகுடம் இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. ஹெட்மயர், ஷிவம் துபே, டிம் சவுதி, உமேஷ் யாதவ், ஸ்டோனிஸ், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், நாதன் கவுல்டர்-நிலே உள்ளிட்ட துடிப்பான வீரர்களும் அந்த அணியில் உள்ளனர். நீண்ட கால ஏக்கத்துக்கு முடிவு கட்ட துடிக்கும் கோலி சகாக்களின் கனவு நனவாகுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்