கிரிக்கெட்

டி20 கேப்டன் பதவியை இழக்கிறாரா சூர்யகுமார் யாதவ்?... அடுத்தது இவரா? - தீவிர ஆலோசனையில் பிசிசிஐ

இந்திய டி20 அணிக்கு புதிய கேப்டனை தேர்வு செய்வது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்னை,

இந்திய டி20 அணியின் கேப்டன்சியில் மாற்றம் வரக்கூடும் என்ற தகவல் தற்போது கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி சிறப்பாக செயல்பட்டாலும், அவரது தனிப்பட்ட பேட்டிங் பார்ம் எதிர்பார்த்த அளவில் இல்லாதது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய கேப்டனை தேர்வு செய்வது குறித்து பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதற்கான பட்டியலில் சுப்மன் கில் மற்றும் திலக் வர்மா ஆகியோர்களில் பெயர்கள் முன்னிலையில் உள்ளதாக தெரிகிறது. இருவரும் இளம் வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது திறமையை நிரூபித்துள்ளதுடன், எதிர்கால இந்திய அணியின் முக்கிய முகங்களாகவும் பார்க்கப்படுகின்றனர்.

குறிப்பாக, சுப்மன் கில் தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்படுகிறார். ஜூன் மாதம் நடைபெற உள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மறுபுறம், திலக் வர்மாவும் தனது ஆட்டத்தால் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுபோல் தெரிகிறது.

எனினும், இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து கேப்டனாக நீடிப்பாரா அல்லது புதிய கேப்டன் நியமிக்கப்படுவாரா என்பது வரவிருக்கும் தொடர்களில் தெளிவாகும்.