கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இளஞ்சிவப்பு பந்து

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்த மாற்றங்கள் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளன.

மும்பை,

சர்வதேச கிரிக்கெட்டில் சில முக்கிய விதிமுறை மாற்றங்களுக்கு ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்த மாற்றங்கள் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளன.

டெஸ்ட் போட்டிகளில் பிங்க் பால் சோதனை

டெஸ்ட் போட்டிகளில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தடைபடுவதை குறைக்கும் நோக்கில், சிவப்பு பந்துக்கு பதிலாக இளஞ்சிவப்பு பந்தை பயன்படுத்தும் சோதனை முயற்சிக்கு ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது.

போட்டி தொடங்குவதற்கு முன்பாக இரு அணிகளும் சம்மதித்தால் மட்டுமே இந்த நடைமுறை அமல்படுத்தப்படும். எனினும், ஜூன் 4-ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்தி-நியூசிலாந்து தொடரில் இந்த விதிமுறை அமலுக்கு வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைதானத்திற்குள் பயிற்சியாளர்களுக்கு அனுமதி

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் டிரிங்க்ஸ் இடைவேளையின் போது, தலைமைப் பயிற்சியாளர் அல்லது நியமிக்கப்பட்ட அணி நிர்வாகி மைதானத்திற்குள் சென்று வீரர்களுடன் நேரடியாக ஆலோசனை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் பயன்படுத்தப்பட்டு வந்த 'ஸ்ட்ராடஜிக் டைம்அவுட்' நடைமுறையைப் போல, தற்போது இந்த வசதி சர்வதேச கிரிக்கெட்டிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

டி20 போட்டிகளுக்கு புதிய நேரக் கட்டுப்பாடு

சர்வதேச டி20 போட்டிகளில் இரண்டு இன்னிங்ஸ்களுக்கு இடையிலான ஓய்வு நேரம் 15 நிமிடங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கும் நேரத்தில் பேட்ஸ்மேன்கள் உடனடியாக விளையாடத் தயாராக இருக்க வேண்டும் என்றும் புதிய விதிமுறை தெரிவிக்கிறது.

லெக்-சைடு வைடு விதிமுறை நிரந்தரம்

லெக்-சைடு பந்துகளுக்கு வைடு வழங்கும் போது, பேட்ஸ்மேன் தனது கிரீஸில் இருந்து நகர்ந்துள்ளாரா என்பதை அடிப்படையாகக் கொண்டு நடுவர்கள் துல்லியமாக முடிவெடுக்க உதவும் 'கைடு லைன்ஸ்' முறை இனி நிரந்தரமாக்கப்பட்டுள்ளது.

ஹாக்-ஐ மூலம் பந்துவீச்சு ஆக்சன் கண்காணிப்பு

ஒரு பந்துவீச்சாளரின் பந்துவீச்சு முறை விதிமுறைகளுக்கு முரணாக இருப்பதாக நடுவர்கள் சந்தேகித்தால், அதை ஆய்வு செய்ய ஹாக்-ஐ (Hawk-Eye) தொழில்நுட்ப தரவுகளை பயன்படுத்த ஐசிசி அனுமதி வழங்கியுள்ளது.