கிரிக்கெட்

ஆடுகளத்தின் தன்மைக்கு தகுந்தபடி வெஸ்ட்இண்டீஸ் அணியினர் அருமையாக ஆடினார்கள் - விராட்கோலி பாராட்டு

ஆடுகளத்தின் தன்மைக்கு தகுந்தபடி வெஸ்ட்இண்டீஸ் அணியினர் அருமையாக விளையாடினார்கள் என்று இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.

சென்னை,

இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆடுகளத்தின் தன்மைக்கு தகுந்தபடி வெஸ்ட்இண்டீஸ் அணியினர் அருமையாக விளையாடினார்கள் என்று இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் சென்னையில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஷாப் பண்ட் 71 ரன்னும், ஸ்ரேயாஸ் அய்யர் 70 ரன்னும் எடுத்தனர். பின்னர் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 47.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்து வெற்றியை தனதாக்கியது. ஹெட்மயர் 139 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஷாய்ஹோப் 102 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஹெட்மயர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் 126 பந்துகளும், வெஸ்ட்இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர்கள் 72 பந்துகளும் வீசினார்கள். இரு அணி சுழற்பந்து வீச்சாளர்களும் சேர்ந்து மொத்தம் 198 பந்துகள் வீசியும் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்த அளவுக்கு அதிகமாக சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீசி விக்கெட் எதுவும் கைப்பற்றாமல் இருப்பது இது 4-வது முறையாகும். வெற்றிகரமாக இலக்கை எட்டிப்பிடித்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்த 2-வது வீரர் என்ற பெருமையை ஹெட்மயர் (139 ரன்கள்) பெற்றார். 1997-ம் ஆண்டில் மும்பையில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை வீரர் ஜெயசூர்யா ஆட்டம் இழக்காமல் 151 ரன்கள் எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக உள்ளது.

இந்தியாவுக்கு எதிராக வெற்றிகரமாக இலக்கை எட்டிப்பிடித்த ஆட்டத்தில் ஒரு அணியின் 2 பேட்ஸ்மேன்கள் (ஹெட்மயர், ஷாய் ஹோப்) சதம் அடிப்பது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2016-ம் ஆண்டில் பெர்த்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஸ்டீவன் சுமித், ஜார்ஜ் பெய்லி ஆகியோர் ஒருசேர சதம் கண்டு இருந்தனர். இந்த போட்டியில் 2-வது விக்கெட்டுக்கு ஷாய்ஹோப்-ஹெட்மயர் ஜோடி 218 ரன்கள் திரட்டியது. சேசிங்கின் போது ஒரு விக்கெட்டுக்கு வெஸ்ட்இண்டீஸ் இணை சேர்த்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.

இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணி ஒருநாள் போட்டி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி கருத்து தெரிவிக்கையில், நானும், ரோகித் சர்மாவும் இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்படவில்லை. இதனால் இரண்டு இளம் வீரர்களுக்கு (ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர்) முன்கூட்டியே களம் காணும் வாய்ப்பு கிடைத்தது. மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். 6 பவுலர்களுடன் களம் காண்பது நல்லது என்று கருதுகிறேன். மெதுவான ஆடுகளம் என்பதால் கேதர் ஜாதவ் இடம் பெற்றார். மின்னொளியில் விளையாடுவது என்பது மாறுபட்டதாக இருந்தது. என்னை பொறுத்தமட்டில் வெஸ்ட்இண்டீஸ் அணியினர் ஆடுகளத்தின் தன்மைக்கு தகுந்தபடி சிறப்பாக ஆடினார்கள். ஹெட்மயர் ஆட்டம் பிரமாதமாக இருந்தது. ஷாய் ஹோப்பும் நன்றாக விளையாடினார்.

வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தை பிடித்து நேர்த்தியாக வீச முடியாமல் திணறினார்கள். சுழற்பந்து வீச்சாளர்கள் சரியாக பந்து வீச முடியாத அளவுக்கு வெஸ்ட்இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் நெருக்கடி அளித்தனர். ஆடுகளத்தின் தன்மையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், லேசான மாற்றம் இருந்தது. அது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்தது. ரவீந்திர ஜடேஜா ரன்-அவுட் விவகாரத்தில் முதலில் பீல்டர் கேட்டதற்கு நடுவர் அவுட் இல்லை என்று தெரிவித்தார். அத்துடன் அந்த பிரச்சினை முடிந்து விட்டது. ஆடுகளத்திற்கு வெளியே டி.வி.ரீபிளேயை பார்த்து பீல்டருக்கு சொல்லி அதனை வைத்து நடுவர் மறுஆய்வு செய்வதை நான் இதுவரை கிரிக்கெட்டில் பார்த்ததில்லை. அதற்கு விதிமுறையில் இடம் இருக்கிறதா? என்று எனக்கு தெரியவில்லை. நடுவர்கள் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும் என்றார்.

வெற்றிக்கு பிறகு வெஸ்ட்இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் அளித்த பேட்டியில், ஹெட்மயர் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த போட்டியில் ஆடினார். அவர் தனது பணியையும், பொறுப்பையும் உணர்ந்து சிறப்பாக செயல்பட்டார். அவர் மீது எங்களுக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது. ரவீந்திர ஜடேஜா ரன்-அவுட் விஷயத்தில் இறுதியாக சரியான முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. அது தான் முக்கியமானதாகும். நாங்கள் முதலில் அப்பீல் செய்த போது நடுவர் அதனை கணக்கில் எடுத்து கொள்ளவில்லை. இருப்பினும் இறுதியில் சரியான முடிவு கிடைத்தது என்று தெரிவித்தார்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்