மும்பை
2026 டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 போட்டிகள் முடிவடைந்து, அரையிறுதி போட்டிகள் நடக்க உள்ளன. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
தென் ஆப்பிரிக்காவும் நியூசிலாந்தும் மோதும் முதல் அரையிறுதி போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் இன்று நடக்கிறது. இந்தியாவும் இங்கிலாந்தும் விளையாடும், மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற இரண்டாவது அரையிறுதி போட்டி, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் நடப்பு சாம்பியனான இந்தியா உள்ளது. இதற்கான பயிற்சியில் இந்திய அணி ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் இன்று கூறும்போது, வருண் சக்ரவர்த்தியை தன்னுடைய நம்பிக்கைக்கான வீரராக குறிப்பிட்டார். அவர் கூறும்போது, சக்ரவர்த்தியின் பந்து வீச்சு முறையை பற்றி நான் வெளியே கூற முடியாது.
ஆனால், அவரிடம் நான், நம்முடைய பந்து வீச்சு வரிசையில் திறமையுடனும், வித்தியாசத்துடனும் பந்து வீசுபவராக இருக்கிறீர்கள் என தொடர்ந்து கூறி வருகிறேன். ஒவ்வொரு பந்து வீசும்போதும் அதில் விக்கெட் எடுக்கும் திறனை அவர் பெற்று முன்னேறியிருக்கிறார் என கூறியுள்ளார்.
அவர் அதிக திறன் வாய்ந்தவர் என நான் நினைக்கிறேன். பந்து வீசும்போது அவருக்கு அந்த நம்பிக்கை வர வேண்டும். அவருடைய வேகம், சரியாக கட்டுப்படுத்தும் திறன் ஆகியவற்றை பெற்று விட்டால் அவருடைய திறமை வெளிப்படும். நெருக்கடியான சூழல்களில் முக்கியம் வாய்ந்த ஓவர்களில் திறமையாக பந்து வீச கூடிய தகுதி வாய்ந்த வீரராக அவர் தொடர்ந்து இருந்து வருகிறார் என கூறினார்.
நடப்பு 2026 டி20 உலகக்கோப்பை தொடரில், இந்தியாவின் அதிக விக்கெட் எடுத்தவராக வருண் சக்ரவர்த்தி இருக்கிறார். 7 போட்டிகளில் 15.33 சராசரியுடன் 12 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருக்கிறார்.