பெல்பாஸ்ட்,
அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி, ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. பெல்பாஸ்டில் நடைபெற்று வந்த இந்த போட்டியில் நியூசிலாந்து அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்தது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும், ரச்சின் ரவீந்திரா மற்றும் டாம் பிளெண்டலின் சிறப்பான ஆட்டத்தால் வலுவான நிலையை எட்டியது.
அதிரடியாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா 121 ரன்களும், டாம் பிளெண்டல் 186 ரன்களும் குவித்தனர். மேலும், பாக்ஸ்கிராப்ட் 98 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். இதன்மூலம் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்து அணி, நியூசிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 179 ரன்களுக்கு சுருண்டது. அயர்லாந்து தரப்பில் மெக்பிரைன் அதிகபட்சமாக 73 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் நாதன் ஸ்மித் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
311 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாலோ-ஆன் பெற்ற அயர்லாந்து, இரண்டாவது இன்னிங்சிலும் கடும் நெருக்கடியை சந்தித்தது. 2-ஆம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்திருந்த அந்த அணி, 3-ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் பிளேயர் டிக்னர் மற்றும் நாதன் ஸ்மித் ஆகியோர் அயர்லாந்து பேட்டர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். ஹாரி டெக்டர் டிக்னரின் பவுன்சரில் ஆட்டமிழந்தார். கர்டிஸ் காம்பர் கையில் பந்து பலமாக தாக்கியதால் 4 ரன்களுடன் ரிட்டையர்ட் ஹர்ட் ஆனார். சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர் ஸ்டீபன் டோஹெனி 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் லோர்கன் டக்கர் 69 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஆனால் அரைசதம் கடந்த அடுத்த பந்திலேயே விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் மார்க் அடைர் 47 பந்துகளில் 44 ரன்கள் விளாசி கடைசி வரை போராடினார்.
இறுதியில் அயர்லாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்த வெற்றிக்குப் பிறகு நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு புறப்பட்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. மறுபுறம், அயர்லாந்து அணி ஜூன் மாத இறுதியில் இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 தொடருக்கு தயாராகிறது.